"ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜூன், 2022

"ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாரம், பென்னாகரம் சமுதாய கூடத்தில் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாரம், பென்னாகரம் சமுதாய கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விதமாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பொதுநல நிதியின் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று (29.06.2022) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையேற்று, "ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:-

குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் தான், ஆரோக்கியமான மனநிலை குழந்தைகளுக்கு வரும். ஆரோக்கியமான, செயல்பாடுகள் இருக்கும், உடல் ஆரோக்கியமே குழந்தைகளின் ஆரோக்கியமான மனநிலைக்கும், ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கும் முக்கியம் என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் மொத்தம் 1333 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் 0-6 வயது வரை மொத்தம் 1,06,921 குழந்தைகள் உள்ளனர். "ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற திட்டத்தின் கீழ் இக்குழந்தைகளின் எடை, உயரம் கணக்கிடப்பட்டதில் 28,936 குழந்தைகள் ஊட்டசத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இக்குழந்தைகள் அனைவருக்கும் கடந்த 25.05.2022 முதல் 22.06.2022 வரை சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, இதில் 521 குழந்தைகளுக்கு மருத்துவசிகிச்சை தேவைப்படுகிறது என கண்டறியப்பட்டு இக்குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விதமாக இக்குழந்தைகளுக்கு டேட்சிரப், நெய், சிவப்பு அவல், வெல்லம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள 142 குழந்தைகளில் 35 குழந்தைகளுக்கு ஊட்டசசத்து பெட்டகம் இன்று வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழைந்தைகள் அனைவருக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது.

இக்குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டின் வேறுபாடு மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் பொழுது மிக குறைவான அளவே உள்ளது. பெரிய வேறுபாடுகள் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு நீங்குவதற்கு கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கன்வாடி மையங்களுக்கு சென்று, முறையாக எடை, உயரத்தினை கணக்கிடுதல் வேண்டும். மேலும், ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விதமாக அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மாவினை அனைத்து குழந்தைகளுக்கும் கொடுப்பார்கள். இதுவே போதுமானதாக இருக்கும். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் ஊட்டசத்து பெட்டகத்தில் உள்ள டேட்சிரப், நெய், சிவப்பு அவல், வெல்லம் போன் ஊட்டச்சத்து பொருட்களுடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து கொடுக்கலாம். மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஊட்டச்சத்து பொருட்களை தொடர்ந்து குழந்தைகளுக்கு தருவதால், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும். பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றரை ஆண்டுகளாவது, தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். 

மேலும், பெற்றோர்கள் தங்களின் ஒரு குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையேயான குறைந்தபட்ச பிறப்பு இடைவெளி இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வி இன்றியமையாதது. ஆகையால் பெண் குழந்தைகளையும் நன்றாக படிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலினை ஒன்றரை ஆண்டுகளாவது, தாய்மார்கள் நிச்சயம் கொடுக்க வேண்டும். 

நமது உடல் ஆரோக்கியத்தின் வளர்ச்சிக்கும் நம்முடைய பகுதிக்கு அருகாமையில் கிடைக்கும் கொய்யா, பனங்கிழங்கு, முருங்கைக்கீரை, கீரைகள் உள்ளிட்டவற்றை உட்கொண்டாலே போதுமானது. 18 வயதிற்கு குறைவான பெண்களுக்கு திருமணம் என்பது சட்டப்படி குற்றம். அரசு பெண்ணிற்கான திருமண வயதை 18 ஆக அறிவித்திருந்தாலும், ஒரு பெண் தனது உடலளவில், மனதளவில் 21 வயது பூர்த்தி அடைந்தால் தான் திருமணத்திற்கான நிலையினை அடைய வாய்ப்புள்ளது. 

எனவே பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கட்டாயம் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி படிக்க வைக்க வேண்டும். மேலும், கர்ப்பிணி பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு முறையாக சென்று எடை, உயரம் கணக்கிடுதல் வேண்டும். எவ்வகையான ஊட்டச்சத்து உணவினை உட்கொள்ளுதல் வேண்டும் என்ற ஆலோசனையினை கிராமப்புற செவிலியர்களிடம் பெற்று, ஊட்டச்சத்து உணவினை முறையாக உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி கவிதா ராமகிருஷ்ணன், பென்னாகரம் பேரூராட்சித்தலைவர் திரு.வீரமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திருமதி.ஜான்சிராணி, பென்னாகரம் வட்டாட்சியர் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வடிவேலன், திரு.அசோக்குமார், பென்னாகரம் செயல் அலுவலர் திருமதி.சு.கீதா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், அங்கன்வாடி குழந்தைகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.