தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நமாண்டஅள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நமாண்டஅள்ளி கிராமத்தில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த நமாண்டஅள்ளி கிராம மக்கள் பஞ்சப்பள்ளி முதல் இராயக்கோட்டை வரை செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசாரிடம் கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் இப்பகுதியை புறகணிப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் சீராக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கிராம மக்கள் மறியல் போராட்டத்தால் பஞ்சப்பள்ளி - இராயக்கோட்டை செல்லும் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
.gif)

