இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 452 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதன அள்ளி, எரங்காடு காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் எதிர்பாராதவிதமாக ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை அவரது தாயார் திருமதி.அமுதா அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று வழங்கினார்.
மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு நடைபெற்ற மாவட்ட அளவில் சிறந்த சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டியில் முதலிடம் பெற்ற பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் திருமதி.ஆர்.வளர்மதி அவர்கள் சிறந்த சத்துணவு பணியாளராக தேர்வு பெற்று முதலிடம் பெற்றதை தொடர்ந்து, அவருக்கு ரூ.5,000 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழையும், சிறந்த சமையலருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், புது ஒட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சமையலர் திருமதி.சுதா அவர்களுக்கு ரூ.5,000 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழையும், சிறந்த சமையல் உதவியாளருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற தருமபுரி ஊராட்சி ஒன்றியம், நாயக்கன் கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியின் சமையல் உதவியாளர் திருமதி.திலகா அவர்களுக்கு ரூ.5,000 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று வழங்கினார்.
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி திரு.சீராளன் என்பவரின் மகன் மன வளர்ச்சி மற்றும் மூளை முடக்குவாதத்தால் 80 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டுள்ள பிரதீப் என்ற சிறுவன் பள்ளிக்கு செல்ல மூன்று சக்கர சைக்கிள் தேவை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் வரப்பெற்ற ரூ.9,500/- மதிப்பிலான இலவச மூன்று சக்கர சைக்கிளினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அம்மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்று வழங்கினார். மன வளர்ச்சி மற்றும் மூளை முடக்குவாதத்தால் 80 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டுள்ள பிரதீப் என்ற சிறுவனுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.01.2022 முதல் மன வளர்ச்சி மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டதை தொடர்ந்து, இவருக்கு கடந்த 01.01.2022 முதல் பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு தற்போது ரூ.2000 பராமரிப்பு உதவித்தொகை பெற்று பயன் பெற்று வருகின்றார்.
மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 52 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் பார்வையற்றோருக்கான திறன் பேசிகளையும், 98 செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.25 இலட்சம் மதிப்பீட்டில் செவித்திறன் குறைபாடுடையோருக்கான திறன் பேசிகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.00 இலட்சம் திருமண நிதியுதவி உடன் தாலிக்குத்தங்கமும், 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.26 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கும் விதமாக 10 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று வழங்கினார். ஆக மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 193 பயனாளிகளுக்கு ரூ.25,25,500 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.வி.கே.சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.சீனிவாச சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு.கே.ராமச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

