தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2021 முன்னேற்பாடு பணிகளின் ஒரு பகுதியாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (09.11.2021) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2021 வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வார்டு வாரியாக வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு அதற்கான வாக்குச்சாவடி மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சட்டமன்ற பொது தேர்தலில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளிலேயே இவ்வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2021 வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் / வாக்குச்சாவடிகளில் ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பினாலோ அல்லது ஆட்சேபணைகள் இருந்தாலோ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் எழுத்துப்பூர்வமாக அதன் விவரங்களை வழங்கினால் அதுகுறித்து உரிய கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021 தொடர்பாக வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும், ஒவ்வொரு வார்டிலும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) திரு.எம்.மாரிமுத்துராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல்) திரு. ஆர். இரவிசந்திரன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா சுகுமார் உட்பட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.